ஒரே ஆண்டில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம்: மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மீண்டும் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் கிராம மக்கள் எதிர்பார்ப்பு


ஒரே ஆண்டில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம்:    மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மீண்டும் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்    கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மீண்டும் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி


கண்டாச்சிமங்கலம்,

மணிமுக்தா ஆற்றின் குறுக்கே புதியபாலம் கட்டிய ஒரே ஆண்டில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அங்கு மீண்டும் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தின் வழியாக மணிமுக்தாறு ஓடுகிறது. இந்த கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கும், நாகனூர், விரகாவூர், குடியனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் மணிமுக்தாற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.

இதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் பாலம் கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

அதன்பின்னர், ஆற்றின் குறுக்கே ராட்சத குழாய் அமைத்து அதன் மீது மண் கொட்டி தற்காலிகமாக தரைமட்ட பாலம் என்கிற வகையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்

இதன் வழியாக தான் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் சென்று வருகிறார்கள்.

மேலும் பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விலை நிலங்களுக்கு மணிமுக்தா ஆற்றை கடந்து செல்லும் நிலை உள்ளது.

மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும்போது கோவிலுக்கு வரும் பக்தர்களும், பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளும் மாற்றுப்பாதையில் சுமார் 5 கி.மீ சுற்றி வரும் நிலை உள்ளது. சில சமயங்களில் பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் விளை பொருட்களை தலையில் சுமந்துகொண்டு, தங்களது கால்நடைகளுடன் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே தண்ணீரில் நீந்தி கடந்து செல்லும் அவல நிலையும் உள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு

இதனால், அந்த பகுதியில் பாலம் அமைத்து தரக்கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது பெய்த பருவமழையால், மணிமுக்தா அணையில் இருந்த உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இந்தபகுதியில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே தற்போது அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பலமுறை மனு அளித்துள்ளோம்

இதுகுறித்து பானையங்கால் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் கூறியதாவது:-

பானையங்கால் கிராமத்தில் இருந்து பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் உடைந்து போனது.

இதனால் தியாகதுருகம் பகுதியில் இருந்து பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தற்போது, தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை வழியாக ஆற்றை கடந்து செல்கின்றனர். ஆனால் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது ஆற்றைக் கடந்து செல்ல இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள், இந்த பகுதி கிராமங்களை சேர்ந்த மக்களின் நலன் கருதி உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்றார்.

நிலத்துக்கு செல்ல முடியவில்லை

விவசாயி ஆலன் என்பவர் கூறியதாவது:-

எனக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் கரும்பு, நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். மணிமுக்தா ஆற்றை கடந்துதான் நிலத்திற்கு செல்ல வேண்டும்.

இந்நிலையில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும்போது ஆற்றைக் கடந்து செல்ல முடியாததால் நிலத்திற்கு செல்வதற்கும், வயலில் விளைந்த விளை பொருட்களை வீட்டிற்க்கு எடுத்துவருவதற்கும் விருகாவூர் சாலை வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.

மேலும் கால்நடைகளை மேச்சலுக்கு எங்களது நிலத்திற்கு ஓட்டி செல்ல முடியவில்லை. நிலத்திற்க்கு வேலை செய்வதற்காக கூலி ஆட்களையும் ஆட்டோ, டாட்டா ஏசி போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்லும் நிலை உள்ளது. என்னைப்போல் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மழைகாலத்தில் நிலத்திற்க்கு செல்ல முடியாமல் வேதனை அடைந்து வருகின்றனர் என்றார்.


Next Story