வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் இடிப்பு


வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் இடிப்பு
x
தினத்தந்தி 24 April 2023 12:30 AM IST (Updated: 24 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்தில் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் இடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை

கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்தில் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் இடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலம் கட்டும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமம் ஏசு கோவில் தெருவின் பின்புறம் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் குறுக்கே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பாலம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டது. பாலம் கட்டுவதற்கான ஆணையும் பெறப்பட்டு பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. பாலம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர் கடப்பாரை, கோடரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து பாலத்தை இடித்து அகற்றி விட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தாண்டவன்குளம் கிராமத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் தர்மலிங்கம் (வயது50) என்பவர் புதுப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசின் அனுமதி பெற்று கட்டப்பட்ட பாலம் இடிக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story