பாலம் கட்டும் பணி நிறுத்தம்
கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி காவிரியின் குறுக்கே பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மண் தடுப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
கும்பகோணம்;
கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி காவிரியின் குறுக்கே பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மண் தடுப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
பாலம் கட்டும் பணி
கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரி அருகே காவிரி ஆற்றில் நீரொழுங்கியுடன் கூடிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டப்பட்டால், கும்பகோணம் பழைய பாலக்கரை பாலத்தில் பெரும்பாலான நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். இந்த கட்டுமான பணிகளுக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில் பாலம் கட்டப்படும் பகுதியின் இருபுறமும் மணலை குவித்து தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மண்தடுப்புகள் அகற்றம்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணை திறக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லணையும் திறக்கப்பட்டு உள்ளது. எனவே காவிரியில் தண்ணீர் பாய்வதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை (திங்கட்கிழமை) கும்பகோணம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு தண்ணீர் வந்துவிடும்.இந்த தண்ணீர் கடைமடை வரை செல்வதற்கு வசதியாக பாலம் கட்டுமான பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த மண் தடுப்புகளை பொக்லின் எந்திரம் மூலம் பொதுப்பணித் துறையினர் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காவிரியின் குறுக்கே பாலம் கட்டும் பணியும் நிறுத்தப்பட்டு உள்ளது.
கடைமடை வரை
காவிரியில் பாயும் தண்ணீர் கும்பகோணம் நகரை கடந்து கடைமடை வரை செல்வதற்கு வசதியாக இந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. பாலம் கட்டுமான பணிகளுக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் காவிரியில் பாயும் தண்ணீரின் அளவு குறைந்ததும் பாலப் பணிகள் துரிதமாக நடத்தி முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.