ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டுவந்தால் நன்மை தருமா?
ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வரும் பட்சத்தில் அது நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை தருமா?, பாதிப்பு வருமா? என்பது குறித்து கேட்டபோது வக்கீல்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.
ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வரும் பட்சத்தில் அது நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை தருமா?, பாதிப்பு வருமா? என்பது குறித்து கேட்டபோது வக்கீல்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.
சாமானியனுக்கு தெரியாது
ஆங்கில வார்த்தைகள் இப்போது தமிழ்மொழியுடன் கலந்து அதிகம் உச்சரிக்கப்பட்டாலும், பல கடினமான ஆங்கில சொற்களுக்கு இன்றும் விளக்கம் தெரியாதவர்கள் பலர் உள்ளனர். அதுவும் சட்டம் தொடர்பான ஆங்கில சொற்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படுகிறது. நீதி கேட்டு ஐகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் சாமானிய மனிதன் சென்றால், அங்கு நடைபெறும் வழக்கு விசாரணை குறித்து அவருக்கு எதுவும் தெரியாது.
தன் வக்கீலும், எதிர்தரப்பு வக்கீலும், நீதிபதியின் முன்பு செய்யும் ஆங்கில வாதத்தை புரிந்துகொள்ள முடியாது. அன்னிய மொழியில் நடைபெறும் இந்த வாதத்தில், தான் கொடுத்த விவரங்களை எல்லாம் நீதிபதியிடம் தன் வக்கீல் எடுத்துக்கூறினாரா? என்றும் தெரியாது.
ஜனாதிபதி அதிகாரம்
ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 348-வது பிரிவு, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் ஆங்கிலம் மட்டும்தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அதேநேரம் 348 (2) ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக அந்தந்த மாநில மொழியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்கிறது. இந்த அதிகாரத்தின்படிதான் அலகாபாத், பாட்னா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 ஐகோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக இந்தி உள்ளது. எனவே, சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக ஜனாதிபதி அறிவித்தால், என்னென்ன விளைவுகள் ஏற்படும்? இதுகுறித்து ஓய்ருபெற்ற நீதிபதி மற்றுபம் வக்கீல்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்டது
ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி நந்தன்:-
ஆங்கிலேயர் காலத்தில் உச்சநீதிமன்ற நிர்வாகம் ராணி விக்டோரியா அம்மையாராலும், உயர்நீதிமன்ற நிர்வாகம் மாநில கவர்னராலும், மாவட்ட நிர்வாகம் கலெக்டராலும் நிர்வகிக்கப்பட்டது. நீதிமுறையின் செயல்பாடுகள் ரோமபுரி மன்னர் பின்பற்றியவாறு ஆங்கியேர்களால் பின்பற்றப்பட்டன. நீதிபதிகள் அணியும் உடையும் ரோமபுரி மன்னர் போப் அணிந்து செயல்பட்ட அமைப்பை கொண்டவை. அதுவே இந்திய நாட்டிலும் திணிக்கப்பட்டது. இன்றளவும் அதே உடை, நடைமுறைதான் உள்ளது.
ராணி விக்டோரியாவாலும், மாநில கவர்னராலும், மாவட்ட கலெக்டராலும் அறியப்பட்ட மொழி ஆங்கிலம். அவர்கள் ஆங்கிலேயர்கள், ஆங்கிலத்தில் பேசினால்தான் அறிவார்கள். ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் குடிமகனாக இருந்தவர்கள் தமிழர்கள். அவர்கள் மொழி தமிழ். இவர்களின் குடும்ப உறவு, தனிமனித உறவு. சமூக உறவு, அரசு உறவு ஆகியவற்றுக்கும் அடித்தளம் தமிழ். அதை ஆங்கிலம் அறிந்த வெளிநாட்டினர்களால் எப்படி எளிதில் புரிந்து கொள்ள முடியும்?. கீழமை கோர்ட்டுகளில் தமிழில் வழக்குகள் தயாரிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஐ கோர்ட்டில் ஆங்கிலம்தான் கோலோச்சுகிறது.
தாய் மொழியாம் தமிழ் மொழியை உலகில் பழமையான மொழி என்று கூறுகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் கோர்ட்டுகளில் ஆங்கிலம் தான் வழக்காடு மொழியாக உள்ளது. ஆங்கிலத்தில் வாதாடுவதால் கோர்ட்டில் நடப்பதை பாமர மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் தமிழை வாதாடும் மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாளாக உள்ளது. மக்கள் அறிந்த தமிழ்மொழியில், கோர்ட்டில் வாதாடினால் புரிதல் நன்றாக இருக்கும். பாமர மக்களும் கோர்ட்டு நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடியும். எனவே வழக்காடு வழியாக தமிழை கொண்டு வர வேண்டும்.
அரசியல் ரீதியான கோரிக்கை
அரக்கோணம் அட்வகேட் அசோசியேசன் துணைத் தலைவர் ஹரிதாஸ்:- ரிட் மனுக்கள், ஆட்கொணர்வு மனுக்கள் மட்டுமே ஐகோர்ட்டில் நேரடியாக தாக்கல் செய்யப்படும். மற்றும் மேல் முறையீடுகள் செய்யப்படும். பெரும்பாலான வழக்கறிஞர்கள் இதனை ஏற்காத நிலையில் தான் உள்ளார்கள். மேல்முறையீடு செய்தவர்கள் வழக்கு வாதத்தின் போது அனுமதியும் இல்லை. ஆனால் கீழமை கோர்ட்டுகளில் தமிழில்தான் மனுக்கள் வருகின்றன. மேல் முறையீடு செய்யும் போது அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துதான் கொடுக்கப்படுகிறது. ஐ கோர்ட்டில் தமிழில் வழக்காடுவது என்பது அரசியல் ரீதியான கோரிக்கையாகவே உள்ளது.
திருப்பத்தூரை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.சஞ்சீவி:- சென்னை, மதுரை, ஐகோர்ட்டுகளில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வந்தால் வாதி, பிரதிவாதிகளுக்கு, எளிதில் புரியும். அவர்களுடைய நியாயத்தை தெளிவாக எடுத்து வைக்க முடியும். இரண்டு தரப்பிலும் வக்கீல்கள் வழக்கு பற்றி என்ன எடுத்துரைக்கிறார்கள் என வழக்கு தொடுத்தவருக்கும், எதிர் தரப்பினருக்கும் தெரியும். எனவே தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சட்டக் கல்லூரியில் தமிழில் புத்தகம், தேர்வுகள் வந்துவிட்டது. ஆகையால் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்டு ஆங்கிலத்தில் வாதாடப்பட்டு வந்த நிலை மாறி தற்போது தமிழில் வழக்காடு நிலை ஏற்படுத்த வேண்டும். மேலும் தீர்ப்புகளும் தமிழில் வழங்கப்படும். இதனால் நீதிபதிகள் என்ன கூறுகிறார்கள் என அனைவருக்கும் எளிதில் புரியும். எனவே தமிழில் வழக்காடும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
சட்டம்பற்றி அறிய வாய்ப்பாக இருக்கும்
வேலூரை சேர்ந்த வக்கீல் ராஜகுரு:-
கோர்ட்டுகளை சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு மற்றும் கீழமை கோர்ட்டுகள் என 3 வகையாக பிரிக்கலாம். இதில் மக்களுடன் நேரடி தொடர்பில் கீழமை கோர்ட்டுகளே உள்ளன. கோர்ட்டுகளில் பொதுமக்களுக்கு தங்களின் வழக்கறிஞர் வாதாடுவது குறித்து தெரிய வேண்டும். தமிழில் வாதாடினால்தான், ஏதேனும் முக்கிய தகவல்கள் விடுபட்டிருந்தால் அவர்களே தங்கள் வழக்கறிஞர்களுக்கு தெரியப்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளுக்கும் பொது மக்களுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இதன் பாலமாக வழக்கறிஞர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் இந்த கோர்ட்டுகளில் நீதிபதிகள் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே அங்கு ஆங்கில மொழி அவசியமாகிறது. தீர்ப்பு விவரங்கள் அவர்களின் தாய் மொழியிலேயே தெரிவிக்கப்பட வேண்டும். கீழமை கோர்ட்டுகளில் தாய்மொழியில் வழக்காடுவது தான் 100 சதவீதம் சிறந்தது.
வாலாஜாவை சேர்ந்த வழக்கறிஞர் சீ.சாய்ஸ்ரீ பிரசாத்:-
என்னை பொறுத்த வரையில் தற்பொழுது தமிழ் நாட்டில் தமிழ் மிகவும் முக்கியமான ஒன்று என ஆகிவிட்டது. எல்லா அரசு அலுவலகத்திலும் தமிழ் மொழியில் தான் அனைத்து பெயர் பலகை, கடிதம் மற்றும் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல், கோர்ட்டுகளிலும் தமிழில் வழக்காடினால் தான் சாதாரண மக்களும் சட்டத்தை பற்றி அறிய ஒரு வாய்ப்பாக அமையும் என நினைக்கிறேன். ஏற்கனவே நிறைய கீழமை கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை தமிழ் மொழியில் நடக்கிறது. அதை சட்டமாக இயற்றி அரசாணை வெளியிட்டால் பாமர மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவரவர் மொழியில் இருந்தால் யாருடைய உதவியும் இன்றி தாங்களே முழுமையாக அறிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். மேலும் எங்களை போன்ற வழக்கறிஞர்களும் வழக்கை பற்றி எடுத்துரைக்க சிரமம் ஏற்படாது.
அனுமதி வழங்க வேண்டும்
காட்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் துக்காராம்:- கீழமை கோர்ட்டுகளில் வக்கீல்கள் தமிழ் மொழியில் வாதிடுகின்றனர். இதனால் மனுதாரர்கள் நாங்கள் வாதிடுவதையும், அதற்கு நீதிபதி கூறும் தீர்ப்பையும் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். இதே போல உயர் கோர்ட்டுகளிலும் பாமர மக்களுக்கு தெரிந்த தமிழ் மொழியில் வாதாடினால் அவர்களுக்கு எளிதாக வழக்கின் தன்மை புரியும். கோர்ட்டு நடவடிக்கைகளை பார்க்கும் போதே அவர்களுக்கு அதன் தன்மை புரியும். இல்லையென்றால் வக்கீல்கள் சொல்வதை தான் அவர்கள் கேட்க வேண்டி வரும். எனவே உயர் கோர்ட்டுகளிலும் தமிழில் வாதாட அனுமதி வழங்க வேண்டும்.
வந்தவாசியை சேர்ந்த வழக்கறிஞர் கே.பிரகாஷ்:-
சென்னை ஐ கோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்து வரும் சூழலில் கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை உள்ளூர் மொழிகளில் நடத்த பட்டால் பாமர மக்களுக்கு நீதி பரிபாலனம் எளிதாக கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து. தமிழில் சட்டம் பயின்று வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களுக்கு ஆங்கிலம் இன்னும் அன்னிய மொழியாக உள்ளது. ஆங்கிலத்தில் வழக்கு நடப்பதால் கோர்ட்டுக்குள் என்ன நடக்கிறது என்பது வழக்காடும் வழக்கறிஞர்களுக்கும் புரியாது, மக்களுக்கும் புரியாது. அதே நேரம் தமிழில் வழக்கை நடத்தினால் முழு மன நிறைவு கிடைக்கும். வழக்கில் சாதக, பாதகமும் தெளிவாக புரியும். தமிழை அலுவல் மொழியாக்குவதில் உள்ள ஒரே பிரச்சினை சட்ட நூல்களை மொழி மாற்றுவது தான். கோர்ட்டுகளில் தமிழில் வழக்காடுவது மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.