ஒட்டன்சத்திரம் மார்க்கொட்டில் கத்தரிக்காய் விலை உயர்வு
ஒட்டன்சத்திரம் மார்க்கொட்டில் கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, புல்லாகவுண்டனூர், கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் கத்தரிக்காயை சாகுபடி செய்துள்ளனர். தற்போது அவை விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. சில கிராமங்களில் கத்தரிக்காயை விவசாயிகள் அறுவடை செய்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தரிக்காய் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கத்தரிக்காய் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் சில விவசாயிகள் விலை போகாததால் கத்தரிக்காயை சாலையில் வீசி சென்றனர்.
இந்தநிலையில் தற்போது கத்தரிக்காய் வரத்து குறைந்தது. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ கத்தரிக்காய் தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் கத்தரிக்காய் செடிகளில் பூ உதிர்ந்து காய் காய்ப்பது குறைந்ததே வரத்து குறைவுக்கு காரணம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.