வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு
திருக்காட்டுப்பள்ள:
பூதலூரில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
15 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள அகிலாண்டேஸ்வரி நகரில் வசிப்பவர் ஜெயச்சந்திரன் (வயது41). கோயமுத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வருகிறார். இவர் பூதலூர் அகிலாண்டேஸ்வரி நகர் வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தார். கடந்த 29-ந்தேதி கோயமுத்தூருக்கு சென்றுவிட்டு நேற்று ஜெயச்சந்திரன் பூதலூர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகைளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வசந்தி, பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தஞ்சையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து பூதலூர் போலீசில் ஜெயச்சந்திரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.