வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், வானபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இன்று காலை மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8½ பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.