அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு
திருமயம் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அம்மன் கோவில்
திருமயம் அருகே உள்ள தேக்காட்டூரில் பிரசித்தி பெற்ற அரசநாயகி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து விட்டு பூசாரி கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை வழக்கம்போல் அவர் கோவிலை திறக்க சென்றார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கோவில் முன்பு குவிந்தனர். இதையடுத்து, கோவில் பூசாரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நமணசமுத்திரம் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்றனர்.
நகை, உண்டியல் பணம் திருட்டு
பின்னர் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது கருவறை கதவு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த 11 பவுன் தாலிச்சங்கிலி திருட்டு போயிருந்தது. மேலும் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியலில் வைத்திருந்த பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.