குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் நகராட்சிக்கு உட்பட்ட தென்காசி சாலை பி.எஸ்.கே. பார்க் தெரு பகுதியில் குடிநீர் இணைப்பு குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக சென்றது. நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை தோண்டுவதற்காக எந்திரம் மூலம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் தோண்டி வருகிறார்கள். இதை சமப்படுத்தாமல் சரியாக மூடாமலும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலையில் தோண்டும்போது, பொது மக்களுக்கு பயன்படக்கூடிய குடிநீர் குழாயை பணியாளர்கள் உடைத்து விடுகிறார்கள். முறையாக பணிகள் மேற்கொள்ளப்படாததால் அடிக்கடி இப்பகுதியில் உடைப்பு ஏற்படுகிறது. ராஜபாளையம்-தென்காசி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சகதிக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை முறையாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.