அண்ணன்-தம்பி கைது
வாலிபரை தாக்கி பணம் பறித்த வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி நந்தகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 29) எலக்ட்ரீசியன். இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு ஆன்லைன் மூலமாக ஈரோட்டை சேர்ந்த ஒருவருடன் அறிமுகமாகியுள்ளார். அவருடன் போனில் பேசிக்கொண்டிருந்தபோது தன்னுடைய தோழி தூத்துக்குடியில் உள்ள முள்ளக்காடு கிராமத்தில் இருப்பதாக கூறி அவரது செல்போன் நம்பரை கொடுத்தார்.
அந்த போனுக்கு பாலாஜி வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அப்போது அந்த போனில் இருந்து தொடர்புகொண்ட நபர் முள்ளக்காடு பகுதியில் தன்னை சந்திக்க வருமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற பாலாஜியை அங்கிருந்த பொட்டல்காடு விநாயகபுரத்தைச் சேர்ந்த அவிமன்னன் மகன்களான உதயகிருஷ்ணன் (24), விஜய பெருமாள் (29) ஆகியோர் கம்பி மற்றும் அரிவாளால் தாக்கி பணம் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பொட்டல்காடு விலக்கு பகுதியில் இருந்த உதய கிருஷ்ணன், விஜய பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.