தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பி கைது
கீழ்பென்னாத்தூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 51), மண்பாண்ட தொழிலாளி. இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் சாந்தி.
இந்தநிலையில் வேலுச்சாமி தனது வீட்டின் முன்புறம் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாந்தி அவரிடம் சென்று என்னை கண்காணிப்பதற்காக கேமரா பொருத்துகிறாயா என கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் வேலுச்சாமி சாந்தியை மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த சாந்தியின் மகன்கள் வேடியப்பன், சந்தோஷ் ஆகிய இருவரும் ஓடிச் சென்று வேலுச்சாமியிடம் இருந்த மண்வெட்டியை பறித்து அவரை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் தடுக்க வந்த வேலுச்சாமி மனைவி சுசிலா, தாய் நல்லம்மா ஆகிய 2 பேரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவான அண்ணன்-தம்பி இருவரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் 2 பேரையும் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.