தெருத்தெருவாக சென்று கழுதைப்பால் கறந்து கொடுக்கும் சகோதரர்கள்
மதுரையில் தெருத்தெருவாக சென்று கழுதைப்பால் கறந்து சகோதரர்கள் கொடுக்கின்றனர்.
மதுரை மாநகர பகுதிகளில் சிலர் கழுதைப்பால் விற்பனை செய்கின்றனர். அதில், மகாலிங்கம், அவருடைய சகோதரரும் அடங்குவர். இவர்கள் எஸ்.எஸ்.காலனி பகுதியில் நான்கு கழுதைகளோடு கழுதைப் பாலின் மகத்துவத்தை பற்றி கையில் இருக்கும் ஒலிபெருக்கி மூலம் கூவியபடி வலம் வந்தனர். அவர்களிடம் பேசினோம்.
"கழுதைப்பாலை விட சிறந்த பால் எதுவும் இல்லை. எனக்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டம். இப்போது கடலூரில் வசிக்கிறோம். எங்கள் முன்னோர் கழுதைப்பால் விற்பனை செய்தார்கள். நானும் என் தம்பி மணிகண்டனும் 30 ஆண்டுகளாக கழுதைப்பால் விற்கிறோம்.
கழுதைப்பால் பற்றி நம் மூதாதையர்களுக்கு நிறைய தெரியும். அந்த காலத்தில், பிறந்த குழந்தைக்கு கூட கழுதைப்பால் புகட்டினார்கள். கழுதைப்பால் புகட்டப்படும் குழந்தைகளுக்கு மப்பு, மாந்தம், வற காமாலை, மஞ்சள் காமாலை நோய்கள் வராது. புண், சொரி சிரங்கு வராது. ஜீரண குறைபாடு வராது. கழுதைப்பால் குடித்த குழந்தைகளின் உடல் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இப்போது சில தாய்மார்களுக்கு கழுதைப்பால் மகத்துவம் பற்றி தெரிந்திருக்கிறது. அதனால் நாங்கள் ஒவ்வொரு ஊருக்கும் வரும்போது கழுதைப் பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்.
காலை 6 மணிக்கு கழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக போவோம். குறைந்தபட்சம் 20 கிலோமீட்டர் நடப்போம். ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரை கழுதைப்பால் விற்பனையில் கிடைக்கும்.
கழுதைகளுக்கு தீவனமாக கோதுமை தவிடு, புண்ணாக்கு, வாழைப்பழம் தருவோம். கழுதைகளுக்கும் நோய் எதுவும் வராது. அதனால், மருத்துவ செலவு இல்லை. கழுதைகள் எங்களை வாழ வைக்கிறது என்பதை விட பல குழந்தைகளை நோய் இல்லாமல் வாழ வைக்கிறது என்பது நாங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை. மதுரையில் கழுதைப்பாலை மக்கள் விரும்பி வாங்குவதால் கடலூரில் இருந்து அவ்வப்போது மதுரை வந்து விடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.