ஊதிய உயர்வு கேட்டு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
ஊதிய உயர்வு கேட்டு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
நாகர்கோவில்:
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகளை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊழியர்களுக்கு 1-1-2017 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பதவி உயர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் கூட்டமைப்பின் சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
அதன்படி நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், நேஷனல் பெடரேஷன் டெலிகாம் அசோசியேசன், பாரதிய நேஷனல் டெலிகாம் அதிகாரிகள் சங்கம், அகில இந்திய ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மனித சங்கிலி போராட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் லட்சுமணப் பெருமாள் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சுயம்புலிங்கம் முன்னிலை வகித்தார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜு சிறப்புரையாற்றினார். இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால், மாவட்ட பொருளாளர் பிரதீப் குமார் மற்றும் நிர்வாகிகள் பிரவீன், செல்லதுரை, ஜார்ஜ், மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.