பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
பதவிகளுக்கு ஏற்ப ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க கோரி நீலகிரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
பதவிகளுக்கு ஏற்ப ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க கோரி நீலகிரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்த போராட்டம்
பதவிகளுக்கு ஏற்ப ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய பலன்களை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வேலைநிறுத்தம் போராட்டம் நடந்தது. அவர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. இதனால் அலுவலகங்கள் அலுவலர்கள், ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வேலைநிறுத்தம் காரணமாக அலுவலக பணிகள், பி.எஸ்.என்.எல். சேவை தொடர்பான புகார்களை சரிசெய்யும் பணி பாதிக்கப்பட்டது. ஊட்டி, குன்னூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இன்று ஆர்ப்பாட்டம்
கூடலூர் அலுவலகம் முன்பு நடந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி பவன்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் ஜே.டி.ஓ., ஜே.இ., ஜே.ஏ.ஓ., டிடி மற்றும் இதர இலாகா தேர்வுகளை நடத்த வேண்டும், பரிவு அடிப்படையிலான பணி நியமனத்திற்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. பி.எஸ்.என்.எல். பணியாளர் சங்க செயலாளர் அருள் செல்வம், ஓய்வுபெற்ற அலுவலர் சங்க நிர்வாகி காளிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
முடிவில் சிவக்குமார் நன்றி கூறினார். நீலகிரியில் 2-வது நாளாக இன்று (புதன்கிழமை) பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், பணியாளர்கள் தெரிவித்தனர்.