காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும் -முதல்-அமைச்சர் அறிவுரை


காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும் -முதல்-அமைச்சர் அறிவுரை
x

காவல் நிலையத்திற்குச் சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை, அரசுத்துறைகளின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும் காணொலிக் காட்சி வாயிலாக ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

இந்த அரசின் தலைமையில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகியவற்றை அரசு மிக அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறது.

கோவை (கார் சிலிண்டர் வெடிப்பு), கள்ளக்குறிச்சி (மாணவி மரணம்) சம்பவங்களில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்ட போதிலும், இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்பாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க காவல் துறையின் முக்கிய பிரிவுகளுக்கிடையே மேலும் வலுவான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.

தொழில் அமைதி

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருவது, தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் தொடர்ந்து புதிய தொழில்கள் பெருகும் வகையில், தொழில் அமைதி தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், தொழில் அமைதிக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

மாவட்டங்களில் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும். மாவட்டங்களில் கொலைக் குற்றங்கள், ஆதாயக் கொலைகள், கூட்டுக்கொள்ளைகள், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற குற்ற சம்பங்கள் நடைபெறும் போது மாவட்ட போலீஸ் கமிஷனர்கள் மற்றும் சூப்பிரண்டுகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியை விரைந்து மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து, கொள்ளை போன நகைகளை மீட்டு, இழந்தவர்களுக்குத் திரும்ப வழங்கும் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் தாமதம் காணப்பட்டால், அது நீதிக்கு நாம் செய்யும் பிழையாகி விடும்.

மக்கள் நண்பன்

காவல்துறையின் சிறப்பான, பாரபட்சமற்ற, திறமையான, துரிதமான பணியே, மக்களிடம் காவல்துறைக்கும் அரசுக்கும் நல்ல பெயரை ஈட்டித் தரும். சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் எந்த சக்திகளையும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. எவ்விதத் தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்டம் மற்றும் மாநகரத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

புகார் அளிக்க வரும் ஏழை, எளிய மக்கள், குறிப்பாக பெண்கள், நடவடிக்கை கோரி அணுகும்போது, அவர்களை மனிதநேயத்தோடு அணுகி அவர்களது புகாரை பதிவு செய்து, உரிய மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அணுகுமுறைதான் காவல் துறையை மக்களுக்கு நண்பனாக்கும்.

தமிழ்நாட்டு மக்கள் சட்டம் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள். மத நல்லிணக்கமும், அனைவரிடமும் இணக்கமாக வாழும் தன்மையும் கொண்டவர்கள். இந்தச் சமூகக் கட்டமைப்பை பத்திரமாக கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. மாநில நுண்ணறிவுப் பிரிவு மற்றும் கியூ பிரிவிலிருந்து அனுப்பப்படும் முக்கிய தகவல்களை உடனுக்குடன் கள விசாரணை செய்து, காவல் துறை தலைமையகத்துடன் முழுமையான ஒருங்கிணைப்போடு போலீஸ் சூப்பிரண்டுகளும், போலீஸ் கமிஷனர்களும் செயல்பட வேண்டும்.

நியாயம் கிடைக்கும்

போலீஸ் சூப்பிரண்டுகள் களப் பணிக்கு முக்கியத்துவம் அளித்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளவும், காவல் நிலையங்களுக்கும், துணைக் காவல் நிலையங்களுக்கும், சோதனை சாவடிகளுக்கும் அடிக்கடி நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவும் வேண்டும். கிராம மற்றும் நகர மக்கள் அமைப்புகளோடு அவ்வப்போது கலந்துரையாடி, அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்து, மக்களோடு இணைந்து காவல் துறை அவர்களுக்கு ஓர் உண்மையான நண்பனாகத் திகழ வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் நிலைய அளவில் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பதியப்பட்ட புகார்களின் மீதான விசாரணை நிலை, கைது நடவடிக்கைகளை எந்த நிலையில் உள்ளன என்பதை கண்காணிக்க வேண்டும். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றவில்லை என்றால் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பாக மக்கள் பணியாற்றும் காவல் அலுவலர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக நீங்கள் பாத்திரமாக வேண்டும். காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இதை காவல்துறைத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். இதைத்தான் நானும், மக்களும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். அதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story