தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் கட்டிட மேம்பாட்டு பணிகள்
தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் கட்டிட மேம்பாட்டு பணிகள் ; குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியம், தேரழுந்தூர் ஊராட்சியில் கம்பர் கோட்டம் அமைந்துள்ளது. புகழ் பெற்ற கம்பராமாயணம் தந்த கம்பரை போற்றும் வகையில் அமைந்துள்ள இந்த கம்பர் கோட்டத்தில் திருமண மண்டபம், நூலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் அமைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கடந்த மாதம் கம்பர் கோட்டத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அடிப்படை தேவைகளை மேம்படுத்தி, மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் ஆணைக்கிணங்க, கம்பர் கோட்டம் கட்டிடம் மேம்பாடு, சீரமைப்பு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து நேற்று குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், உமாசங்கர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கிராம நிர்வாகிகளிடம் கம்பர் கோட்டத்தின் விவரங்களை கேட்டுக்கொண்டனர். இந்த ஆய்வில் தேரழுந்தூர் கம்பன் கழக செயலாளர் ஜானகிராமன், தி.மு.க. நிர்வாகிகள் தங்க.ரவீந்திரன், சஞ்சய் வெங்கட்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.