வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுபழுதடைந்த 60 கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடக்கம்அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி


வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுபழுதடைந்த 60 கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடக்கம்அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
x

வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு பழுதடைந்த 60 கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெறுகிறது என்று அமைச்சர் சு.முத்துசாமி தொிவித்தாா்.

ஈரோடு

வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ள 60 கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கி உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

பணிகள் தொடக்க விழா

ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் சிலேட்டர்புரம் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நபார்டு மற்றும் கிராமசாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு போட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, தார் ரோடு அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து அவர், கதிரம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் பயன்படும் வகையில் தலா ரூ.17 ஆயிரம் மதிப்பிலான 2 குப்பை வண்டிகளை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வழங்கினார். பின்னர் திருவாச்சி பகுதியில் சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு உள்ள மேம்பால நடைபாதையையும், சின்னியம்பாளையம் ஊராட்சியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊர்ப்புற நூலகத்தினையும் அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

60 கட்டிடங்கள்

இதைத்தொடர்ந்துஅமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கதிரம்பட்டி மற்றும் சிலேட்டர்புரம் பகுதியில் தார் ரோடு போடும் பணி இன்னும் 6 மாதங்களில் முடிவடையும். இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் உள்ளன. வீட்டு வசதி வாரியத்தில் 50 சதவீத காலி பணியிடங்கள் உள்ளன. இதில் வாரிசு அடிப்படையில் சில பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடங்கியுள்ளது.

வீட்டு வசதி வாரியத்தில் தமிழகம் முழுவதும் இடிந்து விழும் நிலையில் இருந்த 138 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அதில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் 60 கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய குடியிருப்புகளை இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும். வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக சுயநிதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட இடங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டும் பணிக்கான சட்டத்திருத்தத்திற்கு கிடைத்துள்ளது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார்கள் ஜெயக்குமார், அமுதா மற்றும் ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story