புகழூர் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி பலி


புகழூர் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி பலி
x

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் புகழூர் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி பலியானார்.

கரூர்

காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி

கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே மோதுகாடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 32). இவர் புகழூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் தோட்டக்குறிச்சி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

செம்படாபாளையம் அருகே உள்ள எல்லக்கருப்பண்ணசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது வேலாயுதம்பாளையத்தில் இருந்து தோட்டக்குறிச்சி நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாங்கல் மேட்டுத்தெருவை சேர்ந்த ராஜா மகன் மாணிக்கம் (22) என்பவர் மோகன்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதினார்.

பலி

இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மோகன்ராஜை மேல்சிகிச்சைக்காக கரூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story