காளை விடும் விழா
கீழ்கொத்தூர் கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது.
அணைக்கட்டு
அணைக்கட்டு தாலுகா கீழ்கொத்தூர் கிராமத்தில் 62-ம் ஆண்டு காளைவிடும் விழா இன்று நடந்தது.
துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய கவுன்சிலர் கே.எஸ்.கணபதி, ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் மேட்டுக்குடி குணசேகரன் ஆகியோர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு காளைவிடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பல்வேறு பகுதிகளிலிருந்து 184 காளைகள் பங்கேற்றன. ஒடுகத்தூர் கால்நடை மருத்துவர் வினில்குமார் கால்நடைகளை பரிசோதனை செய்தபின் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
விழாவை பார்க்க நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். இலக்கை அடைய வேகமாக ஓடிய காளையின் எதிரே நின்ற வீரர்களை முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தீபிகா தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
வேகமாக ஓட முயன்ற 2 காளைகள் ஓடும் பாதையில் வழுக்கி விழுந்தன. உடனடியாக அந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்.
வெற்றி பெற்ற காளைகளுக்கு 52 பரிசுகள் வழங்கப்பட்டன. ஒடுகத்தூர் வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், விழா குழுவினர் விஜயகுமார், ஸ்ரீதர், விஸ்வநாதன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கீழ்கொத்தூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.