குட்லவாரிபல்லி கிராமத்தில் காளை விடும் விழா
குடியாத்தம் அருகே உள்ள குட்லவாரிபல்லி கிராமத்தில் நடந்த காளை விடும் திருவிழாவில் 180-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
காளை விடும் விழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள வீரிசெட்டிபல்லி ஊராட்சி குட்லவாரிபல்லி கிராமத்தில் 108-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 180-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன.
காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன. அப்போது அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் காளைகளை உற்சாகப்படுத்தினர்.
ரூ.50 ஆயிரம் பரிசு
காளை விடும் திருவிழாவிற்கு கே.ராமரத்தினம், ஏ.முனிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், தாசில்தார், எஸ்.விஜயகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.
வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.40 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.30 ஆயிரம் பரிசுகளுடன் மொத்தம் 40 காளைகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
விழாவின்போது காளைகள் முட்டியதில் காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்தவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் குட்லவாரிபல்லி ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.