பெரியபுத்தூரில் எருதாட்டம்


பெரியபுத்தூரில் எருதாட்டம்
x
சேலம்

கொண்டலாம்பட்டி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூரில் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாதம் 2-வது வியாழக்கிழமை எருதாட்டம் நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று எருதாட்டம் நடைபெற்றது. இதையொட்டி ஊர் பொதுமக்கள், பக்தர்கள் 10 குழுக்களாக பல்வேறு ஊர்களுக்கு சென்று எருதுகளை பூஜை புனஸ்காரங்களுடன் பெரிய புத்தூர் கோவில் அருகே அழைத்து வந்தனர். ஊரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள வெண்ணங்கொடி முனியப்பனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டவுடன் அங்கிருந்து மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள மைதானத்தில் எருதாட்டம் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் மணிமாறன், மேற்கு தாசில்தார் அருள் பிரகாஷ், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், வீரபாண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெண்ணிலா சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். எருதுகளுக்கு வடம் கயிறு கட்டி, இருபுறமும் வீரர்கள் பொம்மையை வைத்து ஆட்டினர். போட்டிக்கு முன்னதாக எருதுகளை கால்நடை டாக்டர்கள் பரிசோதித்தனர். வீரர்களின் பாதுகாப்புக்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொது மருத்துவ குழுக்களும், தீயணைப்பு படையினரும் அங்கு பணியில் இருந்தனர். கொண்டலாம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தி தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. எருதாட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊர் தர்ம கர்த்தா சிவானந்தம் மற்றும் ஊர் கவுண்டர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story