திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்


திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருமயம் அருகே உள்ள பரளிசேரி காத்த அய்யனார் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 16 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 6 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமாக பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இந்த போட்டியில் முதல் பரிசை பரளி யஸ்வந்த் சுரேஷ், 2-ம் பரிசு விராமதி சஸ்மிதா, 3-ம் பரிசு துளையானூர் பாஸ்கரன் மகேஸ்வரி, 4-ம் பரிசு வெட்டிவயல் சுந்தரேசன் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வென்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 10 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில், பந்தய தூரமாக போய்வர 6 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை கோனாபட்டு கொப்புடையம்மன், 2-ம் பரிசு மாவூர் ராமநாதன், 3-ம் பரிசு மாவூர் ராமச்சந்திரன், 4-ம் பரிசு தேவகோட்டை லட்சுமணன் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

இதையடுத்து, வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற மலைக்குடிப்பட்டி- மதுரை சாலை இருபுறமும் திரளான மக்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். பந்தயத்திற்கான ஏற்பாடுகளை பரளி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story