முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம்


முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி இலக்கை நோக்கி மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன.

புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோவில்

ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆவணி மாத பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

இந்த போட்டி பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் வெற்றி இலக்காக பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், நடுமாடுகளுக்கு 6 மைல் தூரமும், கரிச்சான் மாடுகளுக்கு 5 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது.

சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்

முதலில் பெரிய மாடுகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில், வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதனை சாலையின் இருபுறமும் ஏராளமானோர் கண்டு களித்தனர். இந்த போட்டியில் அம்மன்பேட்டை சகாயராணி பொய்கை வயல் முத்துக்கருப்பர் மாடுகள் முதல் பரிசை தட்டி சென்றன, 2-ம் பரிசை பரளி சித்தர் எட்டிமங்களம் பங்கஜ் கணேசன் மாடுகளும், 3-வது பரிசை பூக்கொல்லைகாளி ரீத்தீஷ்வரன் மாடுகளும் தட்டி சென்றன.

நடுமாட்டில் முதல் பரிசை கழுகுமனை குப்பத்தேவன் மாடுகளும், 2-வது பரிசை பட்டாங்காடு காத்தாயி அம்மன் மாடுகளும், 3-வது பரிசை வள்ளல் நாட்டார் மாடுகளும் தட்டி சென்றன.

பரிசுகள்

இதையடுத்து, கரிச்சான் மாடுகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில், 27 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி ெபற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டி பத்திரம் பாரிவள்ளல் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story