டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம்
ஆவுடையார்கோவில் அருகே மணல் அள்ளி வந்த டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் குவாரி
ஆவுடையார்கோவில் அருகே பரமந்தூர் வெள்ளாற்று பகுதியில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேரடியாக மணல்குவாரிக்கு சென்று மணல் அள்ளுவதற்கு பதிலாக, பொதுப்பணித்துறை சார்பில் அள்ளி வைக்கும் மணலை எடுக்கும் சூழ்நிலை உள்ளது.
எனவே பொதுப்பணித்துறை அள்ளி வைக்கும் மணலில் தரம் இல்லை. இதனை மக்களிடம் விற்க முடியாது. அதற்கு பதிலாக தாங்களே நேரடியாக மணல் அள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் பால கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.