விற்பனைக்கு குவிந்த கரும்பு கட்டுகள், மஞ்சள் குலைகள்


விற்பனைக்கு குவிந்த கரும்பு கட்டுகள், மஞ்சள் குலைகள்
x

பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு கட்டுகள், மஞ்சள் குலைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. இதனை வாங்க சந்தைகள், சாலையோரங்களில் முளைத்த திடீர் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு கட்டுகள், மஞ்சள் குலைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. இதனை வாங்க சந்தைகள், சாலையோரங்களில் முளைத்த திடீர் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது.

குமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள்.

சந்தைகளில் கூட்டம்

பொங்கல் பண்டிகையன்று பெரும்பாலான மக்கள் புத்தாடை அணிந்து பொங்கலிடுவது வழக்கம். இதனால் ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் பொங்கலிடுவதற்கு தேவைப்படும் புதுப்பானை, கரும்பு, மஞ்சள் குலை, பொங்கல் வைப்பதற்கு அடுப்பு எரிக்க பயன்படும் பனை ஓலை, காய்கறிகள், பழ வகைகள் போன்றவற்றை வாங்கி தயாராக வைத்திருப்பது வழக்கம்.

மேலும் புதுமண தம்பதிகள் தலைப்பொங்கல் கொண்டாடுவார்கள். எனவே பெண் வீட்டார் பொங்கல் சீர்வரிசையாக புத்தாடை, நகைகள், புது பாத்திரங்கள், இனிப்புகள் வாங்கிக் கொடுப்பார்கள். இதற்காகவும் பலர் கடை, கடையாக ஏறி, இறங்கி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறார்கள்.

இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள கடைவீதிகள், சந்தைகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திடீர் கடைகள்

நாகர்கோவில் வடசேரியில் உள்ள கனகமூலம் சந்தை, அப்டா மார்க்கெட், கோட்டார் சந்தை ஆகியவற்றில் காய்கறிகளும், கரும்புக்கட்டுகளும், பழ வகைகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் கிழங்கு வகைகளான சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, சேம்பு, கருணைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, பிடிகிழங்கு, காய்ச்சி கிழங்கு போன்ற கிழங்கு வகைகளின் வரத்தும் அதிகமாக உள்ளன.

மேலும் நாகர்கோவில் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் திடீர் கடைகளும் முளைத்துள்ளன. அவற்றில் மஞ்சள் குலை, பொங்கல் பானைகள், கரும்புக் கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story