120 ஆண்டுகள் பழமையான கலோனியல் பங்களா சீரமைக்கும் பணி


120 ஆண்டுகள் பழமையான கலோனியல் பங்களா சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் முகாமில் உள்ள சுமார் 120 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கலோனியல் பங்களா கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைக்கும் பணி தொடங்கியது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

மண்டபம் முகாமில் உள்ள சுமார் 120 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கலோனியல் பங்களா கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைக்கும் பணி தொடங்கியது.

கலோனியல் பங்களா

ராமநாதபுரத்தில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மண்டபம் முகாம். இம்முகாமில் கலோனியல் பங்களா உள்ளது. இந்த பங்களா ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். சுண்ணாம்பு கற்களால் இந்த பங்களா கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. வெப்பங்களை தாங்கும் வகையில் கட்டிடத்தின் உள் பகுதி, மேல் பகுதியில் கட்டைகள் பதிக்கப்பட்டு மேலே ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேய பொறியாளர் கலோனியல் என்பவர் இந்த கட்டிடத்தை வடிவமைத்து கட்டியதால் அவர் பெயரில்தான் இந்த கட்டிடம் இன்று வரையிலும் அழைக்கப்பட்டு வருகின்றது.

இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களாக காட்சியளித்து வரும் இந்த கலோனியல் பங்களாவில் கீழ்தளத்தில் 2 அறைகளும் மேல் தளத்தில் 2 அறைகளும் என மொத்தம் 4 அறைகள் உள்ளன. இது சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் அருகிலேயே ஹெலிகாப்டர் தளம் உள்ளது. இந்த பங்களா மற்றும் ஹெலிகாப்டர் தளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றது.

சீரமைக்கும் பணி

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே முதன் முதலாக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்ட இடம் மண்டபம் முகாம்தான். ராமேசுவரம் கோவில் மற்றும் ராமநாதபுரத்திற்கு எந்த ஒரு முக்கிய தலைவர்கள் வந்தாலும் இங்கு வந்திறங்கி பின்னர் கலோனியல் பங்களாவில் ஓய்வெடுத்து விட்டு அதன் பின்னர்தான் ராமநாதபுரமோ அல்லது ராமேசுவரம் பகுதிக்கு சென்று வருவார்கள். இந்த பங்களாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் பழமை வாய்ந்த கலோனியல் பங்களாவை சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதற்காக கட்டிடத்தை சுற்றி கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டு சேதமான சுண்ணாம்பு கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு வருகின்றன.

பழமை மாறாமல்

மேல் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள ஓடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் சுண்ணாம்புக்கல், கடுக்காய், கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்த பணியில் திருமங்கலம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சீரமைப்பு பணி இன்னும் சில மாதங்களில் முடிவடையும் என்று கூறப்படுகின்றது.


Next Story