வீடு புகுந்து 1¼ பவுன் நகை திருட்டு
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து 1¼ பவுன் நகை திருட்டு நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 36). தனியார் மோட்டார் வாகன நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா பி.எட் முடித்துவிட்டு ஆர்.காவனூரில் உள்ள பள்ளியில் பயிற்சிக்காக சென்று வருகிறார். இவர்கள் நேற்றுமுன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்ற சமயம் கணேஷ்குமாரின் தாய் மாரி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இவர் வீட்டை பூட்டிவிட்டு சாய்பாபா கோவில் அருகில் உள்ள வயல் நிலத்தை பார்க்க சென்றுவிட்டாராம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1¼ பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றுவிட்டான். வயலில் இருந்து திரும்பி வந்த மாரி வீட்டில் நகைகள் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கணேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.