பொதுப்பணிதுறை என்ஜினீயர் வீட்டில் திருட்டு


பொதுப்பணிதுறை என்ஜினீயர் வீட்டில் திருட்டு
x

பாளையங்கோட்டையில் பொதுப்பணிதுறை என்ஜினீயர் வீட்டில் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியை சேர்ந்தவர் ரெஜின் ராகுல் (வயது 36). இவர் பொதுப்பணித்துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இவர்கள் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சாத்தான்குளத்தில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை வீட்டு வேலை செய்வதற்காக பெண் ஊழியர் ஒருவர் வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இதுகுறித்து வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார்.

அவர் விரைந்து வந்து மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஷிதா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த டேப்லட் மற்றும் ஒரு மொபட்டை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story