என்ஜினீயர் வீட்டில் கொள்ளை முயற்சி
மண்டைக்காடு அருகே வெளிநாடு புறப்பட்ட நாளில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல்:
மண்டைக்காடு அருகே வெளிநாடு புறப்பட்ட நாளில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்
குளச்சல் அருகே உள்ள சைமன் காலனியை சேர்ந்தவர் ஆன்றனி. இவருடைய மனைவி சாயின் மேரி. இவர்களுடைய மகன் செபாஸ்டின் (வயது 38). இவர் சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அனுஸ்ரீ என்ற மனைவி உள்ளார். செபாஸ்டினுக்கு சொந்தமான வீடு மண்டைக்காடு அருகே காரியாவிளையில் உள்ளது. அந்த வீட்டை சாயின் மேரி கவனித்து வருகிறார்.
இந்தநிலையில் செபாஸ்டின் மாமனார் சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள செபாஸ்டின் சிங்கப்பூரிலிருந்து குடும்பத்துடன் ஊருக்கு வந்தார். அவர் கொச்சி சென்று மாமனார் இறுதி சடங்கில் கலந்து கொண்டு, நேற்றுமுன்தினம் காரியாவிளை வந்தார். அன்று இரவே மனைவி, 2 குழந்தைகளுடன் மீண்டும் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.
கொள்ளை முயற்சி
நேற்று காலையில் சாயின்மேரி வழக்கம் போல் காரியாவிளையில் உள்ள செபாஸ்டின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மேல் மாடி அறைக்கதவு மற்றும் பீரோவையும் உடைத்துள்ளனர். இதுபற்றி செபாஸ்டின் மனைவியை தொடர்பு கொண்டு சாயின்மேரி கேட்ட போது, வீட்டில் தங்கநகை-பணம் எதுவும் வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.