பள்ளி மாணவன் உடல் அடக்கம்
தூக்கு போட்டு இறந்த பள்ளி மாணவன் உடல் அடக்கம் செய்தனர்
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சீனு (வயது 12). பள்ளி மாணவன். இவன் கடந்த 14-ந்தேதி தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்ததாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்தும் உடலை பெற்றுக்கொள்ளாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சில அமைப்புகள், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் மாணவனின் பெற்றோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாணவன் உடலை பெற்றோர் வாங்கி இறுதி மரியாதை செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம், போலீசார் இணைந்து மாணவனின் உடலை அடக்கம் செய்யலாம் என தெரிவித்தது. மேலும் வழக்கை துணை சூப்பிரண்டு அதிகாரத்தில் உள்ள அதிகாரியை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இதனை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுபடி நேற்று காலை மாணவன் உடலை பெற்றோர் பெற்று, இறுதி அஞ்சலி செலுத்தி, அடக்கம் செய்தனர்.