கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்:தமிழக அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்மாநில எல்லையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்


கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்:தமிழக அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்மாநில எல்லையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
x
தினத்தந்தி 29 Sept 2023 12:30 AM IST (Updated: 29 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர், செப்.29-

கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழக அரசு பஸ்கள் ஓசூரில் நேற்று இரவுடன் நிறுத்தப்பட்டன. மேலும் மாநில எல்லையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

காவிரி நீர் பிரச்சினை

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டது. இதைக்கண்டித்து கர்நாடகாவில் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 26-ந் தேதி கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பெங்களூருவில் முழு அடைப்பு நடந்தது.

இதற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு உள்பட பல சங்கங்கள் ஆதரவு அளிக்கவில்லை. அந்த கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகியான வாட்டாள் நாகராஜ் 29-ந் தேதி (இன்று) கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இதில் பா.ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் பங்கேற்கின்றன. இதனால் அங்கு பள்ளி, கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பஸ்கள் நிறுத்தம்

இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் 25-ந் தேதி இரவுடன் தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. 26-ந் தேதி ஒருநாள் பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதன் பின்னர் தமிழக அரசு பஸ்கள் ஓசூர் வழியாக பெங்களூரு சென்றன. இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நேற்று இரவுடன் ஓசூரில் நிறுத்தப்பட்டன.

நேற்று இரவு 9 மணி வரையில் ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு தமிழக அரசு பஸ்கள் அனுமதிக்கப்பட்டன. அதன்பிறகு தமிழக அரசு பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதேபோல் பெங்களூருவுக்கு சென்ற பஸ்களும், ஓசூர் திரும்ப வர அறிவுறுத்தப்பட்டன. இதனால் சுமார் 450 தமிழக அரசு பஸ்கள் ஓசூருடன் நிறுத்தப்பட்டன.

பாதுகாப்பு தீவிரம்

கர்நாடகாவில் முழு அடைப்பு நடைபெறுவதை முன்னிட்டு தமிழக- கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே ஜூஜூவாடி, அத்திப்பள்ளி பகுதிகளில் இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.


Next Story