முள்ளிமுனை கிராமத்திற்கு மீண்டும் அரசு பஸ் இயக்கம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருவாடானை தாலுகா முள்ளி முனை கிராமத்திற்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் உடனடியாக இயக்கப்பட்டது. இதனால் முள்ளி முனை காரங்காடு ஊராட்சி பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொண்டி,
தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருவாடானை தாலுகா முள்ளி முனை கிராமத்திற்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் உடனடியாக இயக்கப்பட்டது. இதனால் முள்ளி முனை காரங்காடு ஊராட்சி பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பஸ்வசதி
தொண்டி அருகே உள்ள முள்ளி முனை கிராமத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடற்கரை கிராமம் என்பதால் வெளியூர் செல்ல இங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஏ. மணக்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து சென்றுவந்தனர்.
ஏ.மணக்குடி பேருந்து நிறுத்தத்தில் பெரும்பாலான பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் முள்ளி முனை கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என ஊராட்சித் தலைவர் அமிர்தவல்லி மேகமலை மற்றும் கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்தபோது அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கோரிக்கை விடுத்தனர்.
புதிய வழித்தடம்
அதன் அடிப்படையில் மதுரையில் இருந்து தொண்டி வழியாக முள்ளிமுனை கிராமத்திற்கு சென்று ராமநாதபுரம் வரை சென்று திரும்பும் புதிய பஸ் வழித்தடம் தொடங்கப் பட்டது. இதன் மூலம் கிராம மக்களும் அருகில் உள்ள காரங்காடு கிராம மக்களும் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் முள்ளி முனை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால் பஸ்கள் நிறுத்தப்பட்டன. சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தபின்னர் முள்ளி முனை கிராமத்திற்கு பஸ் இயக்கப்படவில்லை. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக நிறுத்தப்பட்ட அரசு பஸ் 4 மாதங்களுக்கு பின்னர் நேற்று முள்ளி முனை கிராமத்திற்கு மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் முள்ளி முனை ஊராட்சி பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வரவேற்பு
பஸ் நடத்துனர் ஓட்டுனருக்கு ஊராட்சி தலைவர் அமிர்த வல்லி மேகமலை, ஊராட்சி செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கிராம நிர்வாகிகள் மகளிர் மன்றத்தினர் பொன் னாடை அணிவித்து வரவேற்றனர். மேலும் பொதுமக்கள் குறையை போக்க பெரிதும் துணைபுரிந்த 'தினத்தந்தி' நாளிதழுக்கு கிராம மக்கள் சார்பில் வாழ்த்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.