கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு இரவு நேரங்களில் நோயாளிகள், பொதுமக்கள் சென்று வர ஏதுவாக டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இரவு நேர பஸ் வசதி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. இதில், காவேரிப்பட்டணம் கிளை இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்ல ஏதுவாக, கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வழியாக டவுன் பஸ்களை இயக்க வேண்டும். மருத்துவமனைக்கு எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாலை பிரிவு தடுப்பினை அகற்றி, பொதுமக்கள் நேராக மருத்துவமனைக்கு சென்று திரும்பும் போது, வலது பக்கம் செல்ல சாலையை கடக்க ஏதுவாக வளைவு அமைக்க வேண்டும்.
கட்டண விலக்கு
மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும். அதுவரை அவ்வழியே மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதே போல காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமையில், ஊர் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதி, தேசிய நெடுஞ்சாலை அருகில் சுமார், 35 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறோம். தற்போது அந்த இடத்தை காலி செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இங்கு வசிப்பவர்கள் அனைவரும் கூலி வேலை செய்பவர்கள் ஆவர். எங்களை திடீரென இந்த பகுதியில் இருந்து காலி செய்ய அதிகாரிகள் கூறுகின்றனர். எங்களுக்கு வேறு எங்கும் வீடோ, நிலமோ இல்லை. எனவே எங்கள் அனைவருக்கும் மாற்று இடம் வழங்கி, வீடு கட்டி தர ஆவனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.