தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
செங்குளம் பழைய கோட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்லாமல் நிற்காமல் சென்ற தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிற்காமல் சென்ற பஸ்
ஈரோட்டில் இருந்து அவல்பூந்துறை, அரச்சலூர், நத்தக்காடையூர், காங்கயம், தாராபுரம் வழியாக பழனிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து பழனி செல்வதற்கு நேற்று மதியம் 1 மணிக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள செங்குளம்-பழையகோட்டை பஸ் நிறுத்தத்திற்கு நேற்று மதியம் 1.50 மணிக்கு வந்த போது காங்கயம் செல்வதற்கு நின்று கொண்டிருந்த பயணிகள் சிலர் அந்த பஸ்சை நிறுத்துவதற்காக ைக காட்டினார்கள்.
ஆனால் பஸ்சை டிரைவர் நிறுத்தாமல் அதே வேகத்தில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம பொதுமக்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் தனியார் பஸ் பழனி சென்று விட்டு மீண்டும் இரவு 7.10 மணிக்கு செங்குளம் - பழைய கோட்டைக்கு வந்தது.
சிறை பிடிப்பு
அப்போது அங்கு தயாராக இருந்த பொதுமக்கள் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். பின்னர் அந்த பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோரிடம் பொதுமக்கள் ஏன் பஸ்சை நிறுத்தாமல் சென்றீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரும் இனி செங்குளம்-பழையகோட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை தவறாமல் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாக உறுதி அளித்தனர்.
அதன் பின்னரே பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து இரவு 7.40 மணிக்கு அந்த பஸ் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.