சேத்தியாத்தோப்பு அருகே அரசு விரைவு பஸ், சுற்றுலா பயணிகளின் வேன் நேருக்கு நேர் மோதல் 6 பேர் காயம்
சேத்தியாத்தோப்பு அருகே அரசு விரைவு பஸ், சுற்றுலா பயணிகளின் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் காயமடைந்தனர்.
சேத்தியாத்தோப்பு,
சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த நீலமேகம் என்பவர் ஓட்டினார். பஸ்சில் 46 பயணிகள் பயணம் செய்தனர்.
இதேபோல், கன்னியாகுமரியில் இருந்து ஆம்னிவேனில் சுற்றுலா வந்தவர்கள் வேளாங்கண்ணி சென்றுவிட்டு, அங்கிருந்து விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
நேருக்கு நேர் மோதல்
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு நான்குமுனை சந்திப்பில் அரசு விரைவு பஸ் மற்றும் ஆம்னி வேன் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி, சாலையோரம் இருந்த தடுப்பு கட்டையின் மீது மோதி நின்றது.
இதில் பஸ் கண்டக்டரான வடலூரை சேர்ந்த தில்லை அரசனுக்கும், ஆம்னி வேனில் வந்த 5 பேருக்கும் லோன காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.