பாலக்கோடு அருகே மொபட் மீது மோதி தனியார் பஸ் கால்வாயில் பாய்ந்தது-தொழிலாளி உள்பட 3 பேர் படுகாயம்


பாலக்கோடு அருகே மொபட் மீது மோதி தனியார் பஸ் கால்வாயில் பாய்ந்தது-தொழிலாளி உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே மொபட் மீது மோதிய தனியார் பஸ் கால்வாயில் பாய்ந்தது. இந்த விபத்தில் தொழிலாளி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தனியார் பஸ்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் இருந்து சேலத்துக்கு நேற்று காலை 9 மணிக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை குள்ளனூரை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 49) ஓட்டி சென்றார். கெங்குசெட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (31) கண்டக்டராக உடன் சென்றார். இந்த தனியார் பஸ்சில் மொத்தம் 19 பயணிகள் இருந்தனர்.

தனியார் பஸ் பாலக்கோடு அருகே உள்ள கோடியூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி திருப்பதி (27), தனது மொபட்டை தள்ளி கொண்டு சென்றார். அவர் திடீரென பஸ்சின் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பஸ் டிரைவர் பிரேக் அடித்தார்.

பள்ளத்தில் பாய்ந்தது

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திருப்பதி மற்றும் மொபட் மீது மோதி, சாலையோர கால்வாயில் பாய்ந்தது. மேலும் அங்கிருந்த பனை மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் தொழிலாளி திருப்பதி படுகாயம் அடைந்ததுடன், அவருடைய மொபட்டும் தூக்கி வீசப்பட்டது. மேலும் பஸ்சின் முன்பகுதியில் அமர்ந்திருந்த மாரண்டஅள்ளியை சேர்ந்த சாந்தி (31), பரமேஸ்வரி (35) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். மற்ற பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் தொழிலாளி திருப்பதி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பஸ் மீட்பு

விபத்து குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கால்வாயில் பாய்ந்த தனியார் பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலக்கோடு அருகே மொபட் மீது மோதிய தனியார் பஸ் கால்வாயில் பாய்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story