தர்மபுரி அருகே கடும் பனிமூட்டத்தால் சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு டவுன் பஸ்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக அதிகாலை முதல் பகல் வரையிலும் மாலை முதல் அதிகாலை வரையும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக காலை நேரத்தில் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்று வருகின்றன. இந்தநிலையில் தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், ஏமக்குட்டியூர், வெள்ளோலை, ராஜாபேட்டை வழியாக செல்லும் டவுன் பஸ் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. அப்போது எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவியது. இந்த அரசு டவுன் பஸ் ஏமக்குட்டியூர் அருகே சென்றபோது சாலையில் எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது. திடீரென மோட்டார் சைக்கிள் வந்ததை பார்த்த டிரைவர் பஸ்சை சாலையை விட்டு சற்று கீழே இறக்கி உள்ளார். அப்போது சாலை சரியாக தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்ததால் அந்த டவுன் பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த பஸ் ஒரு பக்கமாக சாய்ந்தது. இதன் காரணமாக பஸ்சுக்குள் இருந்த பயணிகள் தடுமாறி விழுந்தனர். இதைப்பார்த்து அந்த பகுதிக்கு வந்த அக்கம் பக்கத்தினர் பள்ளத்தில் சாய்ந்த பஸ்சில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக அதில் இருந்து இறக்கி விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.