சிதம்பரத்தில்கர்நாடக அரசு பஸ் டிரைவர் திடீர் சாவுபயணிகளை சுற்றுலா அழைத்து வந்தபோது பரிதாபம்
சிதம்பரத்துக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து வந்தபோது கர்நாடக அரசு பஸ் டிரைவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சிதம்பரம்,
சுற்றுலா
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ் மகன் சிவராஜ் (வயது 42). கர்நாடக அரசுக்கு சொந்தமான சுற்றுலா ஆம்னி பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சிவராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தை சேர்ந்த பயணிகள் 45 பேரை ஆம்னி பஸ்சில் தமிழகத்துக்கு சுற்றுலா அழைத்து வந்தார்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று காலை வந்த சிவராஜ் பஸ்சை வடக்கு வீதியில் நிறுத்திவிட்டு, பஸ்சில் வந்த சுற்றுலா பயணிகளுடன் நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
சாவு
அதன்பிறகு சிவராஜ் பஸ்சை இயக்க முயன்றபோது, திடீரென அவர் மயங்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த உடன் வந்த பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாமி தரிசனம் செய்துவிட்டு பஸ்சை இயக்க முயன்ற சுற்றுலா பஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சிதம்பரம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.