வத்தல்மலைக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்
வத்தல்மலைக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சாந்தியிடம் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தர்மபுரி கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தல்மலை கிராமத்தில் 600 குடும்பங்களும், பால் சிலம்பு கிராமத்தில் 170 குடும்பங்களும் வசித்து வருகிறார்கள். இந்த மலை கிராமங்களுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் ரூ.16 கோடி செலவில் சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ரூ.10.5 கோடியில் சாலை அமைத்து கொடுத்தார். இந்த மலை கிராமத்தில் மேல்நிலைப்பள்ளி, கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டன. வத்தல்மலையில் உள்ள பால் சிலம்பு கிராமத்தில் இருந்து பொதுமக்கள் தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றிற்கு 80 கி.மீ. தூரம் செல்லும் நிலை உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இதுவரை வத்தல்மலைக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். வத்தல்மலையில் உள்ள கிராமங்களுக்கு பஸ் விட வேண்டும் என்று சட்டமன்றத்தில் பலமுறை நான் கோரிக்கை வைத்ததால் பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. எனவே இனி மேலும் காலம் கடத்தாமல் வத்தல்மலைக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.