பஸ்- சரக்கு வேன் மோதல்; 21 பேர் படுகாயம்
கோட்டூரில் பஸ்-சரக்கு வேன் மோதிக்கொண்ட விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோட்டூர்:
கோட்டூரில் பஸ்-சரக்கு வேன் மோதிக்கொண்ட விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ்-சரக்கு வேன் மோதல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து ஒரு தனியார் பஸ் நேற்று அதிகாலை கோட்டூருக்கு வந்தது. இந்த பஸ்சை குமாரமங்கலத்தை சேர்ந்த மகேஷ்வரன்(வயது28) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.கோட்டூர் மெயின்ரோட்டில் வந்த போது எதிரே கும்பகோணத்தில் இருந்து தக்காளி ஏற்றி வந்த சரக்கு வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
21 பேர் காயம்
இந்த விபத்தில் பஸ்சில் வந்த 20 பயணிகளும், சரக்கு வேன் டிரைவர் விஜயேந்திரனும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த 21 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விளக்குடியை சேர்ந்த சூர்யா (37), வேன் டிரைவர் விஜயேந்திரன் ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.