விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பஸ்களை ஜப்தி


விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பஸ்களை ஜப்தி
x

திருப்பூரில் விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் கோர்ட்டில் ஒப்படைத்தனர்

திருப்பூர்

திருப்பூரில் விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

அரசு பஸ்கள் ஜப்தி

திருப்பூர் பட்டம்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 59). இவர் கடந்த 14-5-2017 அன்று தனது உறவினருடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது தொரவலூர் அருகே அரசு பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். விபத்து நஷ்டஈடு கேட்டு பாப்பாத்தி திருப்பூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.

கடந்த 27-4-2019 அன்று ரூ.11 லட்சத்து 30 ஆயிரத்தை இழப்பீடாக பாப்பாத்திக்கு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பிறகும் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று பழைய பஸ் நிலையத்தில் நின்ற கோவை கோட்ட அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.

ஆட்டோ டிரைவர் பலி

இதுபோல் திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் துரைபாண்டி (39). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 11-7-2016 அன்று தாராபுரம் ரோட்டில் ஆட்டோவில் சென்றபோது அரசு பஸ் மோதிய விபத்தில் பலியானார். அவருக்கு இழப்பீடு கேட்டு அவருடைய மனைவி திருப்பூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். அவருக்கு ரூ.22 லட்சத்தை இழப்பீடாக அரசு போக்குவரத்து கழகம் வழங்குமாறு கடந்த 5-1-2019 அன்று கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் இதுவரை இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்ற கோவை கோட்ட அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story