புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க கோரிக்கை
புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஒன்றியம் திருமலைக்குடி, முசுண்டப்பட்டி, வலசைபட்டி, இரணிபட்டி, கரிசல்பட்டி, கே.புதுப்பட்டி, செட்டிகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் சென்று வர துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி என சுற்றி மூன்று பஸ்கள் மாறி செல்லவேண்டி உள்ளது. இதனால் சரியான நேரத்திற்கு தாலுகா அலுவலகம் செல்ல முடியாமல் கால தாமதம் ஏற்படுகின்றது. சந்தைக்கு காய்கறிகள் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மோட்டார் சைக்கிளையே நம்பியுள்ளனர். இதன் காரணமாக சிங்கம்புணரியிலிருந்து கொட்டாம்பட்டி, புழுதிபட்டி, கரிசல்பட்டி, வலசைபட்டி வழியாக முசுண்டப்பட்டிக்கு பஸ்கள் இயக்கவும், மற்றொரு வழியாக சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, புழுதிபட்டி, கரிசல்பட்டி வழியாக துவரங்குறிச்சி வரை ஏற்படுத்துவதன் மூலமாக கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் என பலதரப்பட்டவர்கள் பயனடைவர் எனவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சமூக ஆர்வலர்களும், இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.