ஆக்கிரமிப்பின் பிடியில் பர்கூர் பஸ் நிலையம் கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?
பர்கூர்:
பர்கூர் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே கடைகளை அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பர்கூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தமிழகத்தின் குட்டி சூரத் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சிறியது முதல் பெரியது வரையிலான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் உள்ளன. மேலும் 300-க்கும் மேற்பட்ட கிரானைட் தொழிற்சாலைகளும் பர்கூர் மற்றும் அதை சுற்றி செயல்பட்டு வருகின்றன.
பேரூராட்சியாக உள்ள பர்கூரில் பள்ளிகள், மகளிர் கல்லூரி, பொறியியல் கல்லூரி என அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இத்தகைய பர்கூரில் நகரின் மையப்பகுதியில் சிறிய பஸ் நிலையம் இயங்கி வருகிறது. கிருஷ்ணகிரி நகர போக்குவரத்து கழக பணிமனை மற்றும் திருப்பத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து நாள்தோறும 32 டவுன் பஸ்கள் இந்த பஸ் நிலையம் வந்து செல்கின்றன.
ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள்
பர்கூரில் இருந்து சுற்றி உள்ள மத்தூர், போச்சம்பள்ளி மற்றும் ஆந்திர மாநில எல்லையான காளிகோவில், வடமலைகுண்டா, பச்சூர் என பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பர்கூரில் உள்ள அரசு கல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
அதே போல தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும், பல்வேறு பணி நிமித்தமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.
கடும் அவதி
பர்கூர் பஸ் நிலையத்தில் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை கூடுவதால் பஸ்கள் நிற்க முடியாத அளவிற்கு கடைகளை அமைத்து விடுகிறார்கள். இதன் காரணமாக டவுன் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் சாலையோரங்களிலேயே பயணிகளை ஏற்றி செல்லும் நிலை உள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் 4 பஸ்களை கூட அங்கு நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் காரகுப்பம் செல்லக்கூடிய சாலையில் அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியிலும் சாலையின் இருபுறமும் கடைகள் அமைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. சிலர் பஸ் நிலையத்தில் கடைகள் அமைத்து அதனை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதனால் பஸ் நிலையத்தின் இருபுறங்களிலும் உள்ள கடைகளை சந்தைபேட்டையில் அதற்கு உரிய இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் பல கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.