தர்மபுரி புறநகர்-டவுன் பஸ் நிலையங்களை ரூ.1¼ கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி-நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
தர்மபுரி:
தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களை ரூ.1¼ கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நகராட்சி கூட்டம்
தர்மபுரி நகராட்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் மாதையன் வரவேற்றார். கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தர்மபுரி நகராட்சியில் உள்ள புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களை ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைத்தல், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி மற்றும் சாக்கடை கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தனியாரிடம் ஒப்படைப்பது, தடங்கம் கிராமத்தில் உள்ள உரக்கிடங்கில் அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்த அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, தர்மபுரி நகர பகுதியில் அமைந்துள்ள குப்பைகள் பிரிக்கும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது ஆகிய பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தெரு நாய்கள் தொல்லை
தர்மபுரி பகுதியில் பெருகி வரும் நாய்கள் தொல்லையால் சாலையில் நடக்க முடியவில்லை. உடனே நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மயான கொள்ளை திருவிழாக்கள் நடைபெற உள்ளதால் பக்தர்களின் வசதிக்காக குமாரசாமிப்பேட்டை மற்றும் பச்சியம்மன் கோவில் மயானங்களை தூய்மைப்படுத்த வேண்டும். நகரில் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி கவுன்சிலர்கள் பேசினார்கள்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தலைவர் மற்றும் ஆணையாளர் பதிலளித்து பேசினர். இந்த கூட்டத்தில் நகராட்சி உதவி பொறியாளர் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், கோவிந்தராஜ், சீனிவாசலு, சந்திரகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.