பஸ் நிலைய கடைக்காரர்கள் திடீர் சாலை மறியல்


பஸ் நிலைய கடைக்காரர்கள் திடீர் சாலை மறியல்
x

திருவண்ணாமலையில் நகராட்சி அலுவலர்களின் நடவடிக்கையை கண்டித்து பஸ் நிலைய கடைக்காரர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நகராட்சி அலுவலர்களின் நடவடிக்கையை கண்டித்து பஸ் நிலைய கடைக்காரர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் பெட்டிக்கடைகள், பழக்கடைகள், ஸ்வீட் கடைகள் மற்றும் ஓட்டல்கள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்த நிலையில் சமீப நாட்களாக பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாக கூறி நகராட்சி அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு பணியில் ஈடுபட்டதாகவும், அந்த சமயத்தில் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, நேற்றும் நகராட்சி அலுவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளுக்கு அலுவலர்கள் அபராதம் விதித்து உள்ளனர். அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் கடையை மூடிவிடுவோம் என்று அலுவலர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகாரர்களும் கடைகளை அடைத்து பஸ் நிலையத்திற்கு வெளியே மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து பஸ் நிலையம் அருகில் வந்து அலுவலர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மட்டும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று அடிக்கடி சோதனை என்ற பெயரில் வந்து ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்தால் நாங்கள் எப்படி தொழில் செய்ய முடியும்.

கடை வாடகையும் அதிகரித்துள்ள நிலையில் நகராட்சி அலுவலர்களின் இந்த நடவடிக்கையால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். தொடர்ந்து போலீசாரும், நகராட்சி அலுவலர்களும் கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டது.

பின்னர் பஸ் நிலையத்தில் மூடப்பட்ட கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story