பஸ் டயர் வெடித்ததால் பரபரப்பு
பஸ் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா பஸ் ஒன்றில் நேற்று முன்தினம் ராமேசுவரம் வந்தனர். இவர்கள் நேற்று காலையில் அக்னி தீர்த்தக் கடல் மற்றும் கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடி, சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் பஸ்சில் சிவகாசிக்கு புறப்பட்டனர். இந்த பஸ்சை பாக்யராஜ் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். பாம்பன் ரோடு பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் இடதுபுற முன்பக்க டயர் வெடித்தது. உடனடியாக டிரைவர் பஸ்சை பாலத்தின் தடுப்பு சுவர் மற்றும் நடைபாதை மீது மோதாமல் சாமர்த்தியமாக பிரேக் பிடித்து நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கி பாலத்தின் நடைபாதையில் அமர்ந்தனர். பின்னர் மாற்று டயர் பொருத்தப்பட்டு அந்த பஸ் மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.