காயல்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்


காயல்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு  புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
x

காயல்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

புதிய வழித்தடம்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடக்க விழா காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. காயல்பட்டினம் நகர தி.மு.க. செயலாளரும், நகராட்சி தலைவருமான கே.ஏ.எஸ்.முத்து முகம்மது தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஐ.காதர் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

காயல்பட்டினத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தினமும் இப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து காயல்பட்டினம் வருவதற்கான வசதிக்காகவே இந்த பஸ் சேவை போக்குவரத்து துறை அமைச்சரிடம் கேட்டு பெறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு காயல்பட்டினத்தில் இருந்து கோழிக்கோடுக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. முந்தைய ஆட்சியினர் நிறுத்தி விட்டனர். மீண்டும் விரைவில் அந்த பஸ் சேவை தொடங்கப்படும்.

தனி கவனம்

காயல்பட்டினத்திற்கான அனைத்து வசதிகளையும் செய்ய தமிழக முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்த ஊர் மீதும் மற்றும் அவருடைய தொகுதியின் மீதும் தனி கவனம் செலுத்தி வருகிறார். என்னென்ன தேவையோ அதையெல்லாம் கேட்டு பெற்றுத்தருகிறார்.

தினமும் தன்னுடைய தொகுதியில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து செயல்படுத்தி வருகிறார்.

தவறான பிரசாரம்

பா.ஜனதா கட்சியினர், தி.மு.க. அரசு இந்துக்களுக்கு எதிரானது என்ற ஒரு தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு இந்து கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. காயல்பட்டினத்தில் இருந்து நெல்லைக்கு எஸ்.எப்.எஸ். பஸ் ஓடிக்கொண்டிருந்தது. அது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் விரைவில் அந்த பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்பந்து போட்டியில் தமிழகத்தில் சிறந்த வீரர்கள் இங்கு இருந்து தான் செல்கின்றனர். இன்னும் வரும் காலங்களில் அகில இந்திய அளவிலும் பெருமை சேர்க்கும் விதமாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் ே்பசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக நெல்லை பொதுமேலாளர் சரவணன், நாகர்கோவில் மண்டல மேலாளர் கோபாலகிருஷ்ணன், மற்றும் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் சப்-கலெக்டர் புஹாரி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், ஹாங்காங் தமிழ் சங்க முன்னாள் தலைவர் ஏ.எஸ்.ஜமால், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி எ.பி.ரமேஷ், காயல்பட்டினம் நகரசபை துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பஸ் நேரம்

இந்த பஸ் தினமும் மாலை 4.10 மணிக்கு காயல்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூர், நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திற்கு செல்கிறது.

அங்கிருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு காயல்பட்டினத்திற்கு வந்து சேருகிறது.

இந்தியன் வங்கி கிளை இடமாற்றம்

ஆழ்வார்திருநகரியில் உள்ள பஜனை மடம் எதிரே இந்தியன் வங்கி கிளை இயங்கி வந்தது. இந்த கிளை தெற்கு ரத வீதியில் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கிளை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு இந்தியன் வங்கி கோவை பொது மேலாளர் கணேச ராமன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் நெல்லை இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஜெயபாண்டியன், துணை மண்டல மேலாளர் செந்தில்குமார், ஆழ்வார்திருநகரி கிளை மேலாளர் ராயன்டன்சில்வா மற்றும் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் மற்றும் வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story