பஸ்- லாரி மோதல் 22 பேர் படுகாயம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பஸ்- லாரி மோதிக்கொண்ட விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பஸ்- லாரி மோதிக்கொண்ட விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ் மீது லாரி மோதல்
தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து நேற்று மாலை அரசு டவுன் பஸ் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கொண்டு கோபாலபுரம் சர்க்கரை ஆலை, வழியாக பொம்மிடிக்கு சென்றது. டவுன் பஸ்சை பொம்மிடியை சேர்ந்த டிரைவர் மாதுராஜ் (வயது 56), மெணசியை சேர்ந்த சேது (54) கண்டக்டராகவும் இருந்தனர்.
மருக்காலம்பட்டியை தாண்டி அரூர்- பொம்மிடியில் பூதநத்தம் அருகே சென்ற போது சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் இருந்து சிமெண்ட் கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், டவுன் பஸ்சும் மோதிக்கொண்டன.
22 பேர் படுகாயம்
இதில் பஸ் டிரைவர் மாதுராஜ், லாரி டிரைவர் செந்தில், மெணசியை சேர்ந்த அழகரசன் (55,) அமுதா (30), கடத்தூரை சேர்ந்த நர்ஸ் வினோதினி உள்பட 22 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சேலம், தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.