நுழைவு பகுதியை ஆக்கிரமிக்கும் பஸ்களால் இடையூறு


நுழைவு பகுதியை ஆக்கிரமிக்கும் பஸ்களால் இடையூறு
x

திருப்பூர் மத்திய பஸ்நிலையத்தில் பஸ்கள் உள்ளே நுழையும் பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மத்திய பஸ்நிலையத்தில் பஸ்கள் உள்ளே நுழையும் பகுதியில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.இதனால் இங்கு பிற பஸ்கள் செல்வதற்கு இடையூறுஏற்பட்டு வருகிறது.

இடையூறாக நிற்கும் பஸ்கள்

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்வதற்கும், வெளியேறுவதற்கும் தனித்தனியாக இரண்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தற்போது பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்லக்கூடிய நுழைவுப்பாதையின் இருபகுதியிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அடிக்கடி நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் இங்குள்ள பாதை குறுகலாக இருப்பதால் பஸ் நிலையத்தின் உள்ளே பிற பஸ்கள் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது. குறிப்பாக பஸ்கள் அதிகம் வரும் நேரங்களில் பஸ் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டு பஸ்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் பஸ் நிலையத்திற்குள் பயணிகள் நடந்து செல்வதற்கும் இடையூறாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அந்த நேரங்களில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

அதிகரிக்கும் விதிமீறல்

இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரக்கூடிய பகுதி வழியாக சில டிரைவர்கள் பஸ்களை எதிர் திசையில் ஓட்டி செல்கின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் பஸ் நிலையத்தின் உள்ளே அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இஷ்டத்திற்கு கிடைத்த இடத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் குறுக்கும் நெடுக்குமாக நிற்பதால் பஸ்களின் இயக்கத்தில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் எந்த பஸ் எங்கு நிற்கும் என தெரியாமல் பயணிகள் தங்கள் வழித்தடத்திற்கான பஸ்களை தேடி அலையும் நிலை உள்ளது. இதில் பஸ்களை தவறவிடும் சூழலும் ஏற்படுகிறது. மேலும் பஸ்களின் இயக்கத்தில் காலதாமதமும் ஏற்படுவதால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு பஸ் நிலையத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதால் அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே இதை கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.


Next Story