நெய்வேலி அருகேபஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 30 பயணிகள் காயம்
நெய்வேலி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பயணிகள் காயமடைந்தனர்.
மந்தாரக்குப்பம்,
பஸ்கள் மோதல்
மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை கடலூர் மாவட்டம் நெய்வேலி நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை மதுரையை சேர்ந்த அழகர்சாமி(வயது 45) என்பவர் ஓட்டினார்.
நேற்று மதியம் 1 மணியளவில் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் சிவன்கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வளைவில் திரும்பியது. அப்போது நெய்வேலியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பஸ்சும், மதுரையில் இருந்து வந்த அரசு பஸ்சும், எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பஸ்களின் முன்பகுதி சேதமடைந்தது. கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தன.
30 பயணிகள் காயம்
பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் மந்தாரக்குப்பம் கலைமகள் சபா பகுதியை சேர்ந்த லோபாமேரி(45), தமிழ்வளவன்(16), மேலக்குப்பம் கலியபெருமாள்(82), அலமேலு(32), வடக்கு வெள்ளூர் சின்னபிள்ளை(32), நெய்வேலி ஏ.பிளாக் மாற்றுக்குடியிருப்பு அன்புராஜ்(41), வனிதா(34), நெய்வேலி 29-வது வட்டம் தங்கவேல்(60), 21-வது வட்டம் ஹரிணிபிரியா(19), 28-வது வட்டம் பரணிதரன், குமார்(35), 20-வது வட்டம் அரவிந்தன்(20), 30-வது வட்டம் விஜயலட்சுமி(35), தங்கவேல்(53), மார்க்கண்டன்(50), மோகனா(16), குறிஞ்சிப்பாடி ஆயிக்குப்பம் சிவக்குமாரி(43), கீழகொளக்குடி சுவேதா(17), செங்கால்பாளையம் செல்வம்(49), இவருடைய மனைவி தமிழரசி(40), தொப்புளிக்குப்பம் பெரியதம்பி(70), என்.யூ.சி. நகர் தையல்நாயகி(75), மந்தாரக்குப்பம் ரித்திக், சகாயராஜ் (87, வடலூர் முத்துலிங்கம்(50), ராணி(40), பெரியாக்குறிச்சி சாமிக்கண்ணு, பழைய நெய்வேலி துரைராஜ்(87), வெங்கடாம்குப்பம் பாஞ்சாலி(30) மற்றும் விக்னேஷ்வரன் (29)ஆகிய 30 பயணிகள் காயமடைந்தனர்.
டிரைவர், கண்டக்டர் தப்பி ஓட்டம்
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து நிகழ்ந்ததும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோரிக்கை
மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நெய்வேலி நகர சோதனை சாவடி வரையில் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள நான்கு வழி சாலையை சீரமைக்கும் பணி கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது. ஆகையால் இந்த பகுதியில் ஒரு வழிச்சாலையாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தான் அடிக்கடி விபத்து நடைபெற்று வருவதாகவும், இந்த சாலையின் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.